சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். தேமுதிக நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. உடல் நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில இடங்களில் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு திடீரென சென்றார். வீட்டுக்கு வந்த மு.க.ஸ்டாலினை வாசல் வரை வந்து எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார். வீட்டில் விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடையும் அணிவித்தார். பதிலுக்கு விஜயகாந்தும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றார். இந்த சந்திப்பின் போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் இருந்தனர். மேலும் அமைச்சர் துரைமுருகன், துணை பொது செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் போது விஜயகாந்த் தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியை  வழங்கினார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அவருக்கு விஜயகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். மேலும் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜயகாந்த் தொலைபேசியில் பேசியபோது, மு.க.ஸ்டாலின் ‘நேரில் வந்து சந்திப்பதாக விஜயகாந்த்திடம் தெரிவித்திருந்தார்’ அதன் அடிப்படையிலேயே மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலின் ‘திடீரென’ நேரில் சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: