தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 4 பெண்கள் சாம்பியன்களாக தேர்வு

திருச்சி: தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 4 பெண்கள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தவிர்த்து ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையின் கீழ் தேசிய நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நீர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் நீர் வளங்களை பெருக்குதலில் பொதுமக்களின் பங்கு, அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வளங்களை அதிகரித்தல், ஊரக பகுதிகளில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேசிய நீர் திட்டம், ஸ்டாக்ஹோம் தேசிய நீர் நிறுவனம், ஐநா சபை வளர்ச்சி திட்டத்தின் இந்திய பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நீர் மேலாண்மையில் பெண்களில் பங்களிப்பு அதிகரிக்கும் வகையில் பணிகளை செய்து வருகிறது.

இதன்படி, கிராமப்புறங்களில் தங்களின் சமூகத்தில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட பெண்களை தேர்வு செய்து நீர் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 40 பெண்கள் நீர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதன்படி, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த செல்வி, நீலகிரி மாவட்டம் ஆணைக்கட்டியை சேர்ந்த லலிதா, ஈரோடு மாவட்டம் தடசலட்டியை சேர்ந்த வள்ளி, நீலகிரி மாவட்ட சாகுர் கிராமத்தை சேர்ந்த வசந்தா ஆகிய 4 பேர் நீர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்பான விவரம் பின்வருமாறு:

* சுயஉதவி குழுக்கள் மூலம் நீர் ஆதாரங்கள் மீட்பு

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (33). இவர், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவரது கிராமத்தில் வருடத்தில் 50 நாட்கள் மட்டுமே மழை பெய்யும். நீலத்தடி நீர் வறண்டு விட்டது. நீர் நிலைகள் பராமப்பு இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயத்தை விட்டு விட்டு நகரத்திற்கு வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது. இதை சீரமைக்க முடிவு செய்த செல்வி, மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் 100 விவசாயிகளுடன் இணைந்து நீர் செல்லும் வழித்தடங்களை புனரமைத்தார். கிராமத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மீட்டு எடுத்தார். இதை பார்த்த அருகில் உள்ள கிராம மக்களும் இந்த முயற்சியில் இறங்கினர். தற்போது 9 கிராமங்களில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் விவசாயிகள் என்று 3000 பேர் இணைந்து தங்களது கிராமத்தில் இது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் முன்மாதிரியாகவும் செயல்பட்ட காரணத்திற்காக செல்விக்கு நீர் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

* கிராமத்தில் நீர் பயன்படுத்துபவர்கள் குழுவை உருவாக்கியவர்

நீலகிரி மாவட்டம் ஆணைக்கட்டியை சேர்ந்தவர் லலிதா (40). இவர், 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவரது கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. குடிநீர் தேடி பெண்கள் நீண்ட தூரம் சென்று எடுத்து வரவேண்டிய நிலை இருந்தது. இதற்கு தீர்வு காண கிராமத்தில் நீர் பயன்படுத்துவோர் குழுவை உருவாக்கி நீரின் தரத்தை ஆய்வு செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவருக்கு மிகவும் சவலாக இருந்தது. நீர் ஆய்வு தொடர்பான முடிவுகளை பகிரும் கூட்டத்திற்கு ஒரு சிலர் மட்டுமே வந்தனர். இவர்களின் தொடர் பிரசாரம் காரணமாக இதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டனர். இதன்பிறகு ஒவ்வொரு மாதமும் நீர் தரம் தொடர்பான ஆய்வுகளை பகிர தொடங்கினார். மேலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நீர் ஆதராங்களை முறையாக பராமரிக்க தொடங்கினார். தற்போது 7 கிராமங்களில் இது போன்ற குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த லலிதாகவுகு நீர் சாம்பியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

* குழு அமைத்து நீர் நிலைகளை சீரமைப்பு

ஈரோடு மாவட்டம் தடசலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி (40). இவர், 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பழங்குடியின பிரிவை சேர்ந்த இவரது வாழ்க்கை வனத்தை சுற்றிதான் இருந்துள்ளது. மேலும் விவசாயம் இவரது முக்கிய வாழ்வாதாரம். ஆனால், பருவம் தவறி பெய்யும் மழையால் விவசாயம் கடும் நெடுக்கடிக்கு உள்ளானது. இதற்கு தீர்வு காண முடிவு செய்த வள்ளி, நீர் மேலாண்மை பணிகளை செய்ய முடிவு செய்தார். இதை செயல்படுத்துவது தொடர்பாக உள்ளூர் மக்களுடன் ஆலோசனை நடத்தினார். அனைவரின் பங்களிப்பும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து நீர் நிலைகளை மீட்டு எடுத்தார். குழு அமைத்து நீர் நிலைகள் சீரமைப்பு பணியின் தரம் மற்றும் பராமரிப்பு பணிகளை கண்கணித்தார். அனைத்து வீடுகளிலும் சமயலறை தோட்டம் அமைப்பதுதான் இவரது முக்கிய பணி. இதனால் இவருக்கு நீர் சாம்பியன் பட்டம் கிடைத்தது.

* குடிநீர் தரம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் ஆணைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (33). இவர், 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். நீரின் தரம் மிகவும் மேசமாக இருந்தது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தொண்டு நிறுவனம் மூலம் இந்த பகுதியில் நீரின் தரம் மற்றும் இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கண்காணித்து வந்தார். மேலும் நீர் தரம் குறித்து சோதனை செய்யும் பயிற்சியும் பெற்றார். தொடர்ந்து நீரின் தரத்தை சோதனை செய்து பொமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இவருக்கு நீர் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

Related Stories: