அண்டை மாநிலத்தில் இருந்து பரவும் அச்சம்; வெளிமாநில பயணிகளிடம் கொரோனா பரிசோதனை: நெல்லை ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை உஷார்

நெல்லை: வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து நெல்லை ரயில்  நிலையத்தில் நேற்று மாநகராட்சி மருத்துவக் குழுவினர் ரயில் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோ னா 2ம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஒருநாள் சராசரி பரவல் 25க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநகரில் பரவல் எண்ணிக்கையும் 10க்குள் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வெளியான புதிய பட்டியலின்படி 10 பேருக்கு மட்டும் கொரோனா பரவியுள்ளது. மாநகரில் 3 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்துள்ளது. மேலும் கேரளா  உள்ளிட்ட அருகே உள்ள மாநிலங்களில் இருந்து மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கேரளாவில் கொரோனா பரவல் நாள்ேதாறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக  உள்ளது. அங்கு 3வது பரவல் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

எனவே கேரளாவில் இருந்து வருபவர்களிடம் கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டுமென நேற்று முன்தினம் தினகரனில் செய்தி  வெளியான நிலையில், பரிசோதனைக்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதன்படி நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று காலை மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமிட்டனர். கேரளா மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும்  பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் கிருஷ்ணபாபு, சுகாதார ஆய்வாளர் பெருமாள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.  

அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பமும்  பரிசோதிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரை தங்கள் இருப்பிடங்களில்  தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் மாவட்ட எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுகின்றனர்.

Related Stories: