கொரோனா அச்சத்தால் குளிக்க தடை நீடிப்பு: வெறிச்சோடி காணப்படும் அகஸ்தியர் அருவி

வி.கே.புரம்: கொரோனா ஊரடங்கு காரணமாக குளிக்க தடை நீடிப்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் மழைக்காலங்களிலும், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சீசன் காலங்களிலும் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் மட்டும் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்வர்.

முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது. இதன் காரணமாக அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: