கோரிக்கை மனுக்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு அவகாசம் தராமல் வழக்கு தாக்கல் செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா மாரனேரி பகுதியில் பட்டா வழங்கக் கோரி ஏராளமான மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: போதுமான ஆவணங்களின்றி, தாங்கள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கலாகின்றன. இதில், பெரும்பாலான மனுக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே நீதிமன்றத்தில் வழக்காக தாக்கலாகிறது. இந்த நீதிமன்றம் தபால் அலுவலகத்தைப் போல செயல்படுகிறது. இந்த மனுக்களின் மீது இயந்திரத்தனமாக தினசரி உத்தரவிடும் நிலை உள்ளது. இதனால், நீதிமன்றத்தின் பொன்னான நேரம் விழுங்கப்படுகிறது.

இந்த மனுக்களின் மீது பிறப்பிக்கப்படும் தீங்கற்ற உத்தரவுகளை சிலர் தவறாக பயன்படுத்தும் நிலையும் உள்ளது. எனவே, இதுபோன்ற மனுக்களின் மீது உத்தரவிடும்போது சில கடுமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இந்த வழக்குகளை பொறுத்தவரை, தங்கள் கட்டுப்பாட்டில் அந்த நிலத்தை அனுபவிப்பதால் பட்டா உரிமை கோரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை வீணடிக்க கூடாது. வழக்கறிஞர் சங்கங்களுக்கும் இந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். கோரிக்கை மனுக்களின் மீது அதிகாரிகள் பரிசீலிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் வழக்கு தாக்கல் செய்யக் கூடாது. 10 ஆண்டுக்கும் மேலாக பல வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது வேதனையைத் தருகிறது. இதுபோன்ற மனுக்களை ஊக்கப்படுத்த முடியாது என்பதால், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: