லண்டன்: யூரோ கோப்பை தொடரின் பைனலில் இத்தாலி - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு தாண்டி 12.30க்கு தொடங்குகிறது.மினி உலக கோப்பை தொடராகவே கருதப்படும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து அணிகள் களமிறங்குகின்றன. பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில் 10வது முறையாக களமிறங்குகிறது இத்தாலி. ஏற்னவே 6 முறை உலக கோப்பை தொடரிலும், 3 முறை யூரோ தொடரிலும் பைனலில் விளையாடி உள்ளதுடன், 1968ல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி உள்ளது.அந்த அணி அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2வது முறை சாம்பியனாகும் முனைப்பில் களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு இது 2வது இறுதியாட்டம். ஏற்கனவே 1966ல் உலக கோப்பை பைனலில் விளையாடி உள்ளது. ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ பைனலில் களம் காண உள்ளது. அதுமட்டுமல்ல 58 ஆண்டு யூரோ வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது.