புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு; மோடியின் கனவை நிறைவேற்றுவோம் என கருத்து

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். பாஜ தலைமையிலான தேசிய ஜனதாயக கூட்டணி கடந்த 2019ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று கொண்டது. தற்போது, 2 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதில், 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், மீதமுள்ள 28 பேர் இணை அமைச்சர்களாகவும் என மொத்தம் 43 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்காக இலாக்காக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேபினட் அமைச்சர்களாக ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மின்சாரத்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் மற்றும் இணையமைச்சர்களாக சுபாஷ் சர்கார், ஜான் பர்லா உட்பட பல அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இதேபோல், தமிழகத்தில் இருந்து இணையமைச்சரான எல்.முருகனும் பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், மோடியின் கனவை நிறைவேற்றுவோம் என பேட்டி அளித்தனர்.

* கல்வி, வெளியுறவுக்கு 3 இணையமைச்சர்கள்

ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளவர் ஜெயசங்கர். இத்துறைக்கு முரளிதரன் ஏற்கனவே இணையமைச்சராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் வெளியுறவுத் துறைக்கு மேலும் 2 இணையமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மீனாட்சி லேகி மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் இணையமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இருவரும் நேற்று அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்டனர். இதேபோல், கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் பதவியேற்று கொண்டார். இத்துறைக்கும் ராஜ்குமார் ரஞ்சன் சிங், சுபாஷ் சர்கார், அன்னப்பூர்ணா தேவி ஆகிய 3 பேர் இணையமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* ஒரே தொகுதியில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் அமைச்சர்கள்

தமிழக பாஜ தலைவராக பதவி வகித்து வந்த எல்.முருகனுக்கு தாராபுரம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் முறையாக அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது. இவரை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் நிறுத்தப்பட்டார். தமிழக பாஜ தலைவர் போட்டியிட்டதால் இந்த தொகுதி எதிர்பார்ப்புக்குள்ளானது. ஆனால் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரிடம் தோல்வி அடைந்த எல்.முருகனுக்கு தற்போது ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் அமைச்சராகியுள்ளனர்.

* புதிய விதிகளை டிவிட்டர் பின்பற்ற வேண்டும்

தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றத் டிவிட்டர் தவறிவிட்டது. இந்த விதிகள் கடந்த மே 26 முதல் நடைமுறைக்கு வந்தாலும், டிவிட்டர் இன்னும் சமூக ஊடக வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவில்லை. இந்தியாவில் வசிக்கும் மற்றும் வேலை செய்பவர்கள் அனைவரும் நாட்டின் விதிகளை பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

* பாலமாக இருப்பேன்

இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்.முருகன் அளித்த பேட்டியில், ‘தமிழகத்திற்கான மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வழங்கி உள்ளனர். இந்த முக்கிய பொறுப்பில் மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய பாலமாக இருந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடுவேன். மீன்வளத்தை பெருக்கவும், மீனவர் நலனை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பேன். கடலுக்கு செல்லும் மீனவர்கள் சில நேரத்தில் அவர்களுக்கே தெரியாமல் எல்லையை தாண்டுவதால், அண்டை நாடுகளால் தாக்கப்படுகின்றனர். அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2014ம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது ,’’ என்றார்.

Related Stories: