ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காமல் சி.வி.சண்முகம் மூலம் காலி செய்தாரா எடப்பாடி? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

சென்னை: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காததற்கு சி.வி.சண்முகம் சமீபத்தில் பாஜவை தாக்கி பேசியதே காரணமாக இருக்கலாம் எனவும், எடப்பாடி ஆதரவுடன் இது நடந்திருக்குமோ என்ற தகவல் வெளியாகி அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பாஜ தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலையே 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழகத்தில் இருந்து எல்.முருகன் மட்டும் அமைச்சரவைக்கு தேர்வாகி உள்ளார். கூட்டணி கட்சியியான அதிமுகவில் இருந்து யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டி பூசலே காரணம் என்று கூறப்படுகிறது.

தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்தை ஒன்றிய அமைச்சராக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடுமையான முயற்சி எடுத்து வந்தார். இதற்காக தமிழக பாஜ தலைவர்கள் மற்றும் மேலிட பாஜ தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் ராஜ்யசபா எம்பியான தம்பிதுரையும் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வந்தார். இவர்களில் ரவீந்திரநாத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சராகிவிட்டால் ஓபிஎஸ் தரப்பு பாஜ மேலிடத்துடன் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டு தங்களை மதிக்கமாட்டார்கள் என்று எடப்பாடி தரப்பு கருதியது. இந்த சூழ்நிலையில் தான் சம்பந்தமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை தரும் வகையில் இரு நாட்களுக்கு முன்னர் பேசினர்.

இந்த பேச்சை அவ்வளவு சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘‘ பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன. முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், நமது கூட்டணி கணக்கு சரியில்லை. சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார்.

பாமக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், அதிமுக சம்பாதித்த வெறுப்பை சி.வி.சண்முகம் அவ்வளவாக வெளிப்படுத்தவில்லை.. ஆனால், பாஜவை மட்டும் குறிவைத்து சம்பந்தமே இல்லாமல் திடீரென இவர் பாஜகவுக்கு எதிராக எதற்காக பேசினார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில், ”உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக- பாஜ இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இப்படி ஒரு மோதல் எழுந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் எடப்பாடி தரப்பின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் ஓபிஎஸ் தரப்பினருக்கு எழுந்துள்ளது. அதாவது, சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான ஆதரவாளர். ஓபிஎஸ் தனது மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்குவதற்கு முடிந்த அளவுக்கு விசுவாசத்தை டெல்லியில் காட்டி வந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் பேச்சு பாஜ தலைமைக்கு நிச்சயம் பகீரை தந்திருக்கும். ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்னவென்று தெரிந்து கொள்ளவும், தேர்தலில் பாஜவின் பிளான் என்னவென்று தெரிந்து கொள்ளவும், எடப்பாடி பழனிசாமியே, சி.வி. சண்முகத்தை இப்படி பேச வைத்து ஆழம் பார்க்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் தான் சி.வி.சண்முகத்தின் பேச்சு இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது. இந்த காரணத்தால் தான் ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனதாகவும் எடப்பாடி தரப்பு மீது ஓபிஎஸ் டீம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

* ஆங்கிலத்தில் ஓபிஎஸ் அறிக்கை

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும் பேச்சால் அதிமுக-பாஜ இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகாரமாக எழுந்து வரும் நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும் ஒன்றிய அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் மோதல் போக்கு நீடித்ததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை முதல் முதலாக ஆங்கிலத்திலும் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மேலிட தலைவர்கள் இந்த அறிக்கையை படிக்கும் வகையில் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

* அத்தனையும் வேஸ்டா போச்சு

அதிமுக- பாஜ இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், இந்த சர்ச்சைக்கு உடனடியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ பாஜ மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக- பாஜ கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையை பாஜ தலைவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் அத்தனையும் வீணாகி, அவரது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய் விட்டது.

* கூட்டணி கட்சிகளுக்கும் நோ

அதிமுக- பாஜ கூட்டணியில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இதனால் ராஜ்ய சபா எம்பியாக இருப்பதால் அன்புமணியும் பாஜ மேலிட தலைவர்கள் மூலம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பாமகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் திட்டம் பாஜவிற்கு தொடக்கத்தில் இருந்தே இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் ஆரம்பம் முதலே ஒன்றிய அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Related Stories: