கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு செல்ல பிராணிகளுக்கு தடை: சுங்கத்துறைக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் இருந்து செல்லப் பிராணிகளை  இந்தியாவிற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சுங்கத்துறைக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை, அனைத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, அவற்றிற்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க பரிந்துரைக்க  வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாமல் வனவிலங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவது குறித்து சுங்க அதிகாரிகளுக்கு தெரியவந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொடர் நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட விலங்கை, அதே நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘ புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், கொரில்லா குரங்கு போன்ற விலங்குகள், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் அதிகம் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சில மாநிலங்களில் சிங்கம் போன்ற வனவிலங்குகள் கொரோனா  அறிகுறியுடன் மர்மமான முறையில் இறந்ததால், மத்திய சுகாதாரத் துறை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மேற்கண்ட அறிவுறுத்தல்களை கூறியுள்ளது.

Related Stories: