மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ, பைக் ரேஸில் ஈடுபட்ட 12 பேர் கைது: மேலும் 15 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் பைக், ஆட்டோ, கார் ரேஸ் என பலவகையான பந்தயங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்றன. பந்தயத்தில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட தொகை பரிசு, புகழ் மற்றும் கெத்துக்காகவும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.  இதற்காக தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ரேஸ் குறித்த  தகவல்கள், போட்டியிடுபவர்கள் விவரம், போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும். இந்த பைக் ரேஸால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதுடன் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. இதில், மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி ஆட்டோ மற்றும் பைக் ரேஸ் நடந்து வந்தன. இதில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரவாயலில் நடந்த ரேஸில், ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ மெக்கானிக் பிரபாகரன் உயிரிழந்தார்.

அதன் பிறகு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆட்டோ ரேஸ் நடத்த முடியாமல் இருந்தது. தற்போது வாகன போக்குவரத்துகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும்  கடந்த 4ம் தேதி அதிகாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் பங்கேற்றன. ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் சீறி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 4ம் தேதி அதிகாலையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ, பைக் ரேஸ் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் துரத்துவதை அறிந்த ரேஸ் நடத்துபவர்கள் போட்டியை முடிக்காமல் பாதியிலேயே கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது இந்த ரேஸில் பங்கேற்ற ராமாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 தனிப்படை மூலம் 2 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், நேற்று மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட ராமாபுரத்தை சேர்ந்த சீனிவாசன்(35), பரணிபுத்தூரை சேர்ந்த ஸ்ரீதர்(34), கொரட்டூரை சேர்ந்த ரசூல் பாட்ஷா(39). பரணிபுத்தூரை சேர்ந்த மோகன் (எ) வெள்ளைமோகன்(39), எம்ஜிஆர் நகரை சேர்ந்த மகேஷ்(23), விருகம்பாக்கத்தை சேர்ந்த சின்னையா(54), மவுலிவாக்கத்தை சேர்ந்த முரளி(28), பெசன்ட் நகரை சேர்ந்த சங்கர்(39), கார்த்திக்(24), மணிகண்டன்(28), குமரவேல்(20), சூர்யா(20) ஆகிய 12 பேரை போரூர் போலீசார் கைது செய்து 3 ஆட்டோக்கள், 3 பைக்குகள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரேஸில் கலந்துகொண்ட மேலும் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

* மூளையாக செயல்பட்டவர்கள்

ரேஸ் நடத்துவதற்கு பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து தலைவனாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த சந்துரு(35) மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்(35), பரணிபுத்தூரை சேர்ந்த மணிகண்டன்,  அரவிந்த் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த ரேஸை நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரேஸுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் பைக்குகளை பந்தயத்துக்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்துக் கொடுத்தது கைது செய்யப்பட்ட மெக்கானிக் சின்னையா என்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: