பஞ்சாப், அரியானா மாநிலங்களில் திறந்தவெளி ‘டோல்கேட்’டால் ரூ2,000 கோடி ‘அவுட்’ - விவசாயிகள் கூடாரம் அமைத்து போராடுவதால் கவலை

புதுடெல்லி: பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டுள்ளதால், கடந்த 7 மாதத்தில் ரூ. 2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - பஞ்சாப், டெல்லி - அரியானா, டெல்லி - உத்தரபிரதேச எல்லையில், பல்வேறு விவசாய அமைப்புகள் கடந்த 7 மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண்: 44-ல்  உள்ள டெல்லி - சண்டிகர் சாலையில் உள்ள டோல்கேட்டில் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக செல்கின்றன. வழக்கமாக இவ்வழியாக சாலையை கடக்க வேண்டுமென்றால், ரூ.300 வரை செலவாகும்.

ஆனால், கடந்த ஏழு மாதங்களாக கட்டணமின்றி வாகனங்கள் செல்வதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து  மேலும் அவர்கள் கூறுகையில், ‘பஞ்சாப் மற்றும் அரியானாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 சுங்கச்சாவடிக்கள் உள்ளன. இவையெல்லாம் கிட்டதிட்ட கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால், தினசரி இழப்பு ரூ. ஐந்து கோடிக்கு மேல் அதிகரித்து வருகிறது. மத்திய அரசிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், கிட்டதிட்ட சுங்கச் சாவடி மூலம் இதுவரை ரூ. 2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடந்து செல்வதற்காக, இரண்டு பாதைகள் காலியாக விடப்பட்டுள்ளன. மேலும் சில சுங்கச் சாவடிகளில் விவசாய அமைப்புகள் கூடாரங்கள், நாற்காலிகள், விசிறிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இரவு பகலாக சமையல் செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களை வெயில் சூட்டில் இருந்து காக்க, பஞ்சாபில் சில சுங்கச் சாவடிகளில் கான்கிரீட் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். பானிபட் சுங்கச் சாவடியில் அமர்ந்திருக்கும்  விவசாயிகள், வரும் 19ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதால், அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு எந்தவொரு தீர்வும் ஏற்படாத நிலையில், சுங்கச்சாவடிகளால் தேசிய நெடுஞ்சாலை துறைக்குதான் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பற்றி, பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் கவலை கொள்ள வில்லை. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவரை, இன்னும் பல நூறு கோடிகள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கவலையுடன் கூறினர்.

Related Stories: