ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்: ரத்து செய்யப்பட்ட 66ஏ சட்டத்தில் வழக்குப்பதிவு அதிர்ச்சி அளிக்கிறது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ரத்து செய்யப்பட்ட 66ஏ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏயின் படி பிறரை புண்படுத்துதல், பகை உணர்வை தூண்டுதல் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தை கழிப்பிடமாகவும், தேசியச் சின்னமான சாரநாத் சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்காக மும்பை போலீசார் அவர் மீது தேச துரோக வழக்கு 124 ஏ (அவதூறு), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு, 1971ம் ஆண்டு தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘கடந்த 2015ம் ஆண்டே தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66-ஏ உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதனை மீறும் வகையில் தற்போது வரை அந்த சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டனையும் வழங்கி வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், அனைத்து ஆதாரங்களையும் நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்,” சட்டம் 66-ஏ தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டாலும் அது இன்னமும் நடைமுறையில் தான் உள்ளது’’ என தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. நாட்டில் இதுபோன்ற பயங்கரம் நடந்து கொண்டிருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. கடந்த 2015ம் ஆண்டே ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66-ஏ பிரிவின் கீழ் போலீசார் எப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது புரியவில்லை. காவல்துறைக்கு இது தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே பயன்படுத்தி வருகிறார்களா?’’ என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

நீளும் பட்டியல்

கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது,  ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம்பெண்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் என பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, ப.சிதம்பரத்தின்  மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து குறித்து கருத்து வெளியிட்ட ரவி  னிவாசன் ஆகியோர் மீது 66ஏ சட்டப்பிரிவின் படி வழக்குப்பதிந்தது உட்பட இந்த பட்டியல் நீள்கிறது.

Related Stories: