ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் தமிழக போக்குவரத்துத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்: 10 ஆயிரம் காலி பணியிடம் உள்ளது; அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: போக்குவரத்துத்துறையில் உள்ள ஏராளமான குறைபாடுகள் நீக்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒரே தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உள்ளே பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. 19,200 பேருந்துகளில் 14,215 பேருந்துகள் இயக்கப்பட்டது. வருவாய் சீராக வருகிறது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். எஸ்.இ.டி.சி பேருந்துகளில் 1,300 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தேவை உள்ளது. கிட்டத்தட்ட10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது.

பட்ஜெட் முடிந்த பிறகு இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். போக்குவரத்துக்கழம் 33 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 10 நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் பலகைகள் முழுமையாக நிறுவப்பட்டுவிடும். கடந்த அரசில் டெண்டர் போட்டு தான் பேருந்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு பேருந்துக்கு சுத்தம் செய்ய  33 ரூபாய் மிச்சம் செய்யப்படுகிறது. போக்குவரத்துத்துறையை சீரமைக்க வேண்டி உள்ளது. ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 12ம் தேதி முதல் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வரும். லஞ்சத்திற்கு இடம் இல்லாமல் போக்குவரத்துக்கழகம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

* ஒன்றிய அரசு முடிவை ஏற்க முடியாது

எட்டு போடாமலேயே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் சில விதிமுறைகளை தெரிவித்துள்ளார்கள். இதில், ஒன்றிய அரசு கூறும் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் நாம் நகரத்திற்குள் ஓட்டுநர் பள்ளிகளை அமைக்க முடியாது. வெளியே தான் அமைக்க முடியும். எனவே, இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். 14ம் தேதி இதுகுறித்து முதல்வர் ஆலோசனை கூட்டத்தை வைத்துள்ளார். அப்போது முழுமையாக விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Related Stories: