கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதியில் நாளை அதிகாலை பிரேசில்-பெரு பலப்பரீட்சை

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்ற 47வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கால் இறுதியில், பெரு, பிரேசில், கொலம்பியா, அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தன. இதில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு  ரியோ டி ஜெனிரோவில் உள்ள நில்டன் சாண்டோஸ் மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில்-பெரு அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் பிரேசில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. 5 போட்டிகளில் ஆடியதில் 4ல் வெற்றி, ஒரு டிரா கண்டுள்ளது. பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் இந்த தொடரில் 2 கோல் அடித்துள்ளார். உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பிரேசில் அணியில், கேப்ரியல் ஜீசஸ், லூகாஸ், பிரெட் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். மறுபுறம் பிபா தரவரிசையில் 27வது இடத்தில் உள்ள பெரு, கால் இறுதியில் பெனால்டி ஷுட் அவுட்டில் பராகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

லீக் சுற்றில் 4 போட்டியில் 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. ஆண்ட்ரே கரில்லோ, கியான்லுகா லாபாதுலா தலா 2 கோல் அடித்துள்ளனர். பிரேசிலுக்கு சொந்த மண்ணில் அதிர்ச்சி அளித்து பைனலுக்குள் நுழையும் முனைப்பில் பெரு களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 49 போட்டிகளில் மோதியதில் பிரேசில் 35ல் வென்றுள்ளது. பெரு 9 போட்டிகளில் வெற்றிவாகை சூடி இருக்கிறது. 5 போட்டி சமனில் முடிந்துள்ளது. நடப்பு தொடரில் கடந்த 18ம் தேதி மோதிய லீக் ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: