மதுரை அண்ணா நகர் பங்களாவுக்கு அழைத்து வந்து மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் தனிப்படை போலீசார் விசாரணை: ஸ்மார்ட் போன், ஆவணங்கள் சிக்கின; உறவினர்களிடமும் விசாரணை

மதுரை: நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசியா குடியுரிமை பெற்றவர். மலேசியா சுற்றுலா வளர்ச்சிக்கழக தூதரகத்தில் வேலை பார்த்த இவருக்கும், அதிமுகவில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக, சாந்தினி 3 முறை கருவுற்றார். ஆனால், 3 முறையும் சாந்தினியை கட்டாயப்படுத்தி, டாக்டர் மணிகண்டன் அவருக்கு கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் தன்னை மிரட்டுவதாக நடிகை சாந்தினி, மே 28ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து தலைமறைவான மணி கண்டனை கடந்த ஜூன் 20ம் தேதி பெங்களூரூவில் போலீசார்  கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அதன்பின், அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, மணிகண்டன் நேற்று மதுரை அழைத்து வரப்பட்டார். அடையாறு போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் மணிகண்டனை அழைத்துக்கொண்டு நேற்று காலை மதுரை வந்தனர். காலை 8 மணியளவில் மதுரை அண்ணாநகரில் உள்ள மணிகண்டனுக்கு சொந்தமான பங்களாவிற்கு வந்தனர். போலீசாரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். வீட்டில் வைத்து ஒன்றரை மணி நேரம் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது உறவினர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது.

நடிகையை மணிகண்டன், அண்ணாநகரில் உள்ள இந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாரா என்பது குறித்து, பணியாளர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அவரது வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த மற்றொரு ஸ்மார்ட் போன் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை கொடுத்த புகாரில் தொடர்புடைய சில ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. விசாரணைக்குப்பின்னர் 9.30 மணியளவில் போலீசார் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். செய்தியாளர்கள் யாரும் படம் எடுக்க முடியாதபடி சுற்றி வளைத்து அவரை கூட்டி வந்து, வேனில் ஏற்றிச்சென்றனர். இந்த விசாரணை குறித்து உதவி கமிஷனர் நெல்சன் கூறுகையில், ``மாலை 6 மணிக்குள் புழல் சிறையில் அடைக்க வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக சென்னை செல்கிறோம்’’ என்றார்.

Related Stories: