100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு பிடிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை-அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு :  அணைக்கட்டு அருகே 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் அகரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தபட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் அந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு பணிதள பொறுப்பாளராக பூர்ணிமா என்பவர் இருந்து வந்தார். ஓராண்டுக்கு மேல் பணியாற்றி வந்த இவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை பணிக்கு அமர்த்த முயன்றுள்ளனர்.

இதையறிந்த தொழிலாளர்கள், கிராம மக்கள் அவரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முதல் வேறு ஒருவரை பணிதள பொறுப்பாளராக மாற்றும்படி ஊராட்சி செயலாளருக்கு பிடிஓக்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த பிடிஓ கனகராஜ் அங்கு வந்து முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, பணி தள பொறுப்பாளர் மாற்றம் குறித்து திட்டங்கள் பிடிஓ சுதாகரனுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கொரோனா தொற்று முழுமையாக குறையாத பட்சத்தில் ஏன்? கூட்டமாக வந்தீர்கள். இதுபோல் வரக்கூடாது என எச்சரித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடிஓ சுதாகரன் கூறுகையில், ‘ஊராட்சிகளில் பணியாற்றும் பணிதள பொறுப்பாளர்கள் நூறு நாட்கள் மட்டுமே. அதாவது ஒரு பேட்ச் ஆட்கள் வேலை செய்யும்போது மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆனால் அவர் ஓராண்டுக்கு மேலாக பணியாற்றியதால் மாற்றம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றார்.

Related Stories: