சிறுவர்களிடம் 2, 3ம் கட்ட சோதனை சீரம் நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனிகாவின் கூட்டு கண்டுபிடிப்பான ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கும் உரிமையை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது இதன் தடுப்பூசிதான் மக்களுக்கு அதிகளவில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘நோவவாக்ஸ்’ நிறுவனத்தின் கண்டுபிடிப்பான  ‘கோவவாக்ஸ்’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கும் உரிமையையும் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது, இது, இந்த தடுப்பூசியை 2-17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்காக முதல்கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது.

தற்போது, 2வது மற்றும் 3வது பரிசோதனையை அவர்களிடம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்து இருந்தது. இது பற்றி ஆய்வு செய்தவற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி, 2வது மற்றும் 3வது பரிசோதனையை நடத்துவதற்கான அனுமதியை சீரம் நிறுவனத்துக்கு வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மறுத்துள்ளது. பெரியவர்களிடம் நடத்தப்படும் இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் தெரிந்த பிறகு, அதன்  அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. இது, சீரம் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

டாக்டர் ரெட்டிக்கும் நிராகரிப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இது, 2 டோஸ் போடக் கூடியது. இந்நிலையில், கடந்த மே மாதம், ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற புதிய தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்தது. இது, ஒரு டோஸ் மட்டுமே போடக் கூடியது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விநியோக .உரிமையை பெற்றுள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமே, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி உரிமத்தையும் பெற்று சோதனை நடத்தி வருகிறது. இதன் 3ம் கட்ட பரிசோதனையை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இது அனுமதி கோரி இருந்தது. இந்த கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டது. 

Related Stories: