பழனி, திருச்செந்தூர் முருகன், சமயபுரம் மாரியம்மன் ஆகிய 3 கோயில்களை திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு இணையாக மேம்படுத்த முடிவு

* தனியார் முதலீடு மூலம் ஓட்டல், ரிசார்ட்

* 2,547 பணியிடங்களில் புதியவர்கள் நியமனம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த 3 துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை: பழனி, திருச்செந்தூர் முருகன், சமயபுரம் மாரியம்மன் ஆகிய 3 கோயில்களை திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக மேம்படுத்தவும், சுற்றுலாத்துறையில் தனியார் முதலீடு மூலம் ஓட்டல், ரிசார்ட் அமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த 3 துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களை மீட்டெடுப்பதற்காகவும், கோயில்களின் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதி குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு,  முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைப் புதிய தொழில் நுட்பத்தில் வண்ண ஒளியூட்டுதல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளாகத்தைச் சீரமைத்து மேம்படுத்த வேண்டும்.  மேலும், புதிய தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை, அரசு நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டம், புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்குதல், மேம்படுத்திடுதல் மற்றும் பராமரித்தல், தனியார் முதலீடு மூலம் ஓட்டல், ரிசார்ட் மற்றும் கன்வென்சன் சென்டர் உருவாக்குதல், சுற்றுலாத் துறையில் பொது-தனியார் பங்களிப்பு ஆகியவை பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.கலை பண்பாட்டுத் துறையின்கீழ் கலைஞர்களுக்கு 2021ம் ஆண்டுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவது,  60 வயது நிறைவடைந்த தகுதியுள்ள கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தார்.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலையரங்கத்தை ரூ.24.56 கோடியில் மேம்படுத்துதல் குறித்தும் பாந்தியன் கட்டிடம் மீட்டுருவாக்கம் மொத்தம் ரூ.30 கோடியில் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொல்லியல் துறையின்கீழ் உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகங்களை ஏற்படுத்த வேண்டும். சங்ககால துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆழ்கடல் கள ஆய்வு மற்றும் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  

கடைசியாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில், 100 கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துதல், பழனி தண்டாயுதபாணி சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ஆகிய கோயில்களைத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக மேம்படுத்துதல், மலை கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  ஓதுவார் பயிற்சிப் பள்ளி மேம்படுத்தப்பட்டுச் செயல்படுத்துதல், மேலும் 100 திருக்கோயில்கள், 100 தெப்பக்குளங்கள் சீரமைத்தல், 100 திருக்கோவில்களில் நந்தவனங்கள் அமைத்தல்,கோயில்களில் உள்ள 2547 காலிப்பணியிடங்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவது, 110 ஓதுவார்கள் நியமிக்கப்படுவது,  கிராமக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: