புதிய வாகனங்களின் செயல்திறனை பரிசோதிக்க ம.பி.யில் ஆசியாவின் நீளமான சோதனை சாலை: 375 கிமீ வேகத்தில் ஓட்டி பார்க்கலாம்

போபால்: புதிய வாகனங்களின் வேகம் உள்ளிட்ட செயல் திறன்களை சோதனை செய்வதற்காக, மத்தியப் பிரதேசத்தில் ஆசியாவின் மிக நீளமான அதிவேக சாலை திறக்கப்பட்டுள்ளது. கார் முதல் லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் வேகம் உள்ளிட்ட செயல்திறன்களை சாலைகளில் ஓட்டி பரிசோதனை செய்யும். அதிநவீன கார்கள் போன்றவை இப்போதைய நிலையில் 400 கிமீ வேகத்தில் கூட செல்லும் வகையில்உள்ளன. ஆனால், இவற்றை ஓட்டி பரிசோதனை செய்வதற்கு ஏற்ற சோதனை சாலைகள் இந்தியாவில் இல்லை.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், பிதாம்பூரில் ஆசியாவின் மிக நீளமான அதிவேக சாலை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ‘நாட்ராக்ஸ்’ என அழைக்கப்படும் 11.3 கிமீ தூரமுள்ள இந்த சாலையை ஒன்றிய அமைச்சர் ஜவடேகர் காணொலி மூலமாக திறந்து வைத்துள்ளார். நாட்ராக்ஸ் சாலை ஆயிரம்  ஏக்கர் நிலப்பரப்பில், சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர் வரையிலான பல்வேறு வகையான வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக இது விளங்குகிறது.

அதிகபட்ச வேக அளவீடுகள், நிலையான எரிவாயு பயன்பாட்டு வேகம், மாசு வெளியீட்டு சோதனைகள் போன்ற பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் நாட்ராக்ஸ் மையத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த சாலை பல்வேறு வளைவுகளுடனும் அமைக்கப்பட்டு இருப்பதால். அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் பிரேக் திறன், ஸ்டீயரிங் கட்டுப்பாடு போன்றவற்றையும் துல்லியமாக சோதிக்க முடியும். இந்த சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 375 கிமீ வேகத்தை அடைய முடியும். பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், ஆடிபெராரி, லம்போர்கினி, டெஸ்லா போன்ற உயர்தர கார்களின் வேக திறன்களை அளவிடவும் நாட்ராக்ஸ் பயன்படும்.

Related Stories: