மு.க.ஸ்டாலின், யோகியை அருகில் அமரவைத்து பேசிய நிலையில் சவுகானிடம் மோடி ‘இருக்கை இடைவெளி’யை பின்பற்றியது ஏன்? தேசிய தலைமைக்கு சவாலாக மாறியது ம.பி தலைமை மாற்ற விவகாரம்

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரை அருகில் அமரவைத்து பேசிய பிரதமர் மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் ‘இருக்கை இடைவெளி’ அரசியலை பின்பற்றியது ஏன் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய பிரதேச தலைமை மாற்ற விவகாரத்தில், பாஜகவின் தேசிய தலைமைக்கு சவால்விடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மத்திய பிரதேசத்தில் 2018ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் கூட, ஜோதிராதித்யா சிந்தியாவின் (முன்னாள் காங்கிரஸ் தலைவர் தற்போது பாஜக எம்பி) கைங்கர்யத்தால் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜோதிராதித்யா சிந்தியாவின் நிபந்தனைகளின், அவரை எம்பியாக்கிய பாஜக, இன்னும் அவரை மத்திய அமைச்சராக்கவில்லை என்பது தனி கதை. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, மோடியின் அருகில் உள்ள இருக்கைக்கு பதிலாக, தூரமான இருக்கையில் சிவராஜ் சிங் சவுகான் அமர்ந்திருந்தார்.

இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஓர் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது. சிவராஜ் சிங் சவுகானின் சந்திப்பிற்கு பின்னர், அடுத்த நாள் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும், அதற்கடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடியை சந்தித்தனர். இவர்கள், மோடியின் அருகே உள்ள இருக்கைக்கு அருகில் அமர்ந்து அவரிடம் உரையாடினர். இந்த ‘இருக்கை இடைவெளியை’ கையில் எடுத்துள்ள காங்கிரஸ், ‘சிவராஜ் சிங் சவுகானை மோடிக்கு பிடிக்கவில்லை’ என்று கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த  குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதன் பின்னணியில் ஓர் உண்மை உள்ளது. காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதும், மோடியின் முதல் தேர்வாக சிவராஜ் சிங் சவுகான் இல்லை என்பதுதான். ஆனால், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக கொரோனா பிரச்னைகள் வந்தன. அதனால், மத்திய பிரதேச தலைமை மாற்றம் ஒத்திபோனது. மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு மத்திய பிரதேச தலைமையில் மாற்றம் ஏற்படும் என்று கட்சி தலைமை கூறியதால், சிவராஜ் சிங் சவுகான் எப்போது மாற்றப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அம்மாநில பாஜகவில் இருந்து வந்தது.

மேற்குவங்கத்தில் எப்பாடுபட்டாவது ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்த பாஜகவுக்கு தோல்விதான் மிஞ்சியது. இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட் ஒர்க் அவுட்’ ஆகவில்லை என்பதால், அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். அந்த பட்டியலில் உள்ள சிவ்ராஜ் சிங் சவுகானின் எதிர்கோஷ்டி தலைவரான கைலாஷ் விஜயவர்ஜியா (மேற்குவங்க மக்களிடம் அறிமுகமானவர்), மேற்குவங்க தேர்தல்  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர், இந்த மாதம் கட்சியின் மூத்த தலைவர்களை போபாலில் சந்தித்தார். முதல்வர் பதவிக்கான நகர்வுகளை அவர் மேற்கொண்டதாக கூறப்பட்டது. அடுத்த லிஸ்டில் இருந்த தற்போதைய உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும், முதல்வர் பதவிக்கான காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால், இருவருக்குமான ‘சிக்னல்’கள் இன்னும் கிடைக்கவில்லை. கட்சியின் முக்கிய தலைவர்களுக்குள், மாநில தலைமை மாற்றம் குறித்து பேசினாலும் கூட, கட்சிக்கு வெளியே யாரும் இதைப் பற்றி பேசவில்லை. அனைத்து தலைவர்களும், முதல்வர் மாற்றம் குறித்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்தனர்.

இப்பிரச்னைக்கு முடிவுகட்டும் விதமாக, கட்சி தலைமை கொடுத்த அழுத்தத்தால் கைலாஷ் விஜயவர்ஜியாவும், நரோட்டம் மிஸ்ராவும், ‘சிவராஜ் சிங் சவுகானே முதல்வராக இருப்பார்’ என்று கூட்டாக தெரிவித்தனர். இவர்களே இவ்வாறு கூறியதால் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.  ஆனால், பாஜகவின் தேசியத் தலைமையால் கூட சிவராஜ் சிங் சவுகானின் எதிரிகளுக்கு உதவ முடியவில்லை என்பதே உண்மை. இன்றைய நிலையில், சிவராஜ் சிங் சவுகானின் எதிரிகளும், தேசிய அளவில் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்களும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-யின் முக்கிய தலைவர்கள் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது ஆர்.எஸ்.எஸ், சிவராஜ் சிங் சவுகானுக்கு துணையாக நிற்பது போலவே, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த போதும் மோடியின் விருப்பத்திற்கு மாற்றாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அரசியல்  நிபுணர்கள் கூறுகையில், ‘சிவராஜ் சிங் சவுகானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. மாநில பாஜகவின் வேறு எந்தத் தலைவருக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமோ, செல்வாக்கோ இல்லை. மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை அதில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால் சிவராஜ் சிங் சவுகான் தலைமையே, வரும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் என்பது மட்டும் உறுதி. அதுவரை, மோடியின் விருப்பம் கூட மத்திய பிரதேசத்தில் நிறைவேறாது’ என்றனர்.

Related Stories: