அக்.17முதல் நவ.14 வரை ஓமன், அமீரகத்தில் டி20 உலக கோப்பை : ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துபாய்: இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை போட்டி  அக்.17 முதல் நவ.14ம் தேதி வரை  ஓமன், அமீரக நாடுகளில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. கொரோனா பீதி காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த டி20 உலக கோப்பை போட்டியை  ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஐசிசி முடிவு செய்துள்ளதாக  கடந்த வாரம் தகவல் வெளியானது. கூடவே  போட்டி அக்.17ம் தேதி முதல் நவ.14ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்பட்டது.  எனினும், அதனை ஐசிசி,  போட்டியை நடத்த உள்ள பிசிசிஐ உறுதிப்படுத்தவில்லை.  அதே நேரத்தில்  போட்டி நடத்துவது குறித்து இறுதித் தகவல்களை தெரிவிக்க  ஜூன் 27ம் தேதி வரை பிசிசிஐக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று முன்தினம், ‘வீரர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் என அனைவரின்   நலனையும் கருத்தில்  கொண்டு டி20 உலக கோப்பை தொடரை  அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம்.  இதுகுறித்து ஐசிசிக்கும் தெரிவித்துவிட்டோம்’ என்று கூறினார்.

அதனைதொடர்ந்து  நேற்று ‘டி20 உலக கோப்பை  ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். போட்டிகள் அக்.17 முதல் நவ.14ம் தேதி வரை நடைபெறும்’ என ஐசிசி அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. இது குறித்து தலைமை செயல் அலுவலர்  ஜெப் அல்லா்டிஸ் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும்  ஏதாவது ஒரு நாட்டில்  போட்டியை நடத்திதான் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் முக்கியமானது’ என்றார். உலக கோப்பை   இடம் மாறினாலும்,  போட்டியை பிசிசிஐ தான் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: