பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர் குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி : ஆசிரியர்களின் முயற்சிக்கு கிராம மக்கள் வரவேற்பு

பள்ளிப்பட்டு: அரசு பள்ளியில் சேரும் மாணவர் குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி வழங்கும் ஆசிரியர்களின் புது முயற்சி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ளது நெடியம் கிராமம். இங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கிராம பகுதி என்பதாலும், கொரோனா தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், ஆசிரியர்களே முன் வந்து அவர்களது சொந்த செலவிலிருந்து அரிசி மூட்டைகள் வாங்கி 6ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பில் சேர வரும் மாணவர்கள் குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி இலவசமாக வழங்க முடிவு செய்தனர்.

இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செயிடு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் உட்பட ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து இந்த புது முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி புதிதாக சேரும் மாணவர் குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி வழங்கி வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த புது முயற்சிக்கு கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து 25 கிலோ அரிசி பெற்று பயனடைந்து வருகின்றனர்.

Related Stories: