தமிழக அரசு கொரோனாவை சரியாக கையாண்டுள்ளது: வேளாண் நிழல் நிதி நிலைஅறிக்கை வெளியீட்டு விழாவில் அன்புமணி பாராட்டு

சென்னை:  பாமக சார்பில் ஆண்டு தோறும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது, அதன்படி நேற்று வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலியில் வெளியிட்டார். இளைஞரணி தலைவர் அன்புமணி காணொலி  வாயிலாக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,  “ஆளுநர் உரையில் தமிழக அரசு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியாகும் என்று கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டியது, மகிழ்ச்சிகரமானது. இந்த ஆண்டின் சிறந்த தொடக்கமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த ஆண்டு அறிக்கையில் வேளாண் கல்வி, வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம்.

வேளாண் துறைக்கு 47, 750 கோடி நிதி ஒதுக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு 7358.85 கோடி நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். இதையடுத்து அன்புமணி பேசுகையில்,  “எங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வழங்குவார்.  புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆன நிலையில், கொரோனாவை  தமிழக அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. கொரோனா தீவிரமாக காரணம் தேர்தல் தான். தேர்தலுக்கு பிந்தைய இடைக்கால அரசின் காலத்தில் கொரோனா தீவிரமாக பரவியது. கட்சி வேறுபாடு இன்றி நல்ல திட்டங்களை பாரட்டவே செய்வோம். வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட வழக்கை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக திருமாவளவனுக்கு முன்பே ராமதாஸ் போராடி நிலத்தை மீட்டு கொடுத்துள்ளார்” என்றார்.

Related Stories: