மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது ஏன்? முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை: சென்னையில் மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிஏஜிஅறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 75 பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தமாக ரூ.20 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் இழப்பீடு என்று சொல்வது, தணிக்கை துறையே மின்சார இழப்புக்கு, மின்சார கொள்முதல் உற்பத்தி செலவு, பணியாளர் மற்றும் நிதி செலவினங்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கேயும் தவறு நடைபெற்றதாக சொல்லவில்லை.  

பொதுமக்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பது தான் முக்கியமே தவிர, மின்சார வாரியத்திற்கு வருமானத்தை கூட்டுவது என்பது நோக்கமல்ல.  

மின்சாரம் கொள்முதல் செய்ய 8 தனியார் நிறுவனங்களிடம் நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டதில் ரூ.712 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில், மற்ற மாநிலங்களில் 5.50 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டது.  தமிழகத்தில் அதைவிட குறைவாக 4.91 ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.   தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியதிலும், நிலக்கரி வாங்கியதிலும் ரூ.10 ஆயிரத்து 294 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2001-2006 காலகட்டத்திலான அதிமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கியது மட்டுமல்ல, தமிழகத்தின் தேவை போக, உபரியாக இருந்த மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கும் வழங்கினோம்.  

சிஏஜி அறிக்கையில், தமிழக மின்துறையில் முறைகேடுகள் நடந்ததாகவோ, மக்கள் மின்வசதி இன்றி தவிப்பதாகவோ எந்த குறையும் கூறப்படவில்லை.  இருந்தாலும், ரூ.13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் நஷ்டம் என்று தணிக்கை துறை சொல்லி இருக்கிறது. மக்கள் சேவை தான் முக்கியமே தவிர, மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பாரத்தை சுமத்த விரும்பவில்லை.பொதுவாக மத்திய அரசு, மாநில அரசு எதுவாக இருந்தாலும் தணிக்கை துறை இதுபோன்ற கருத்துகளை தான் தெரிவிக்கும் என்றார்.

Related Stories: