பட்டியலின சமூகத்தினர் பட்டியலில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரை சேர்க்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரை சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சி.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: பட்டியலின பிரிவில் குடும்பன் உள்ளிட்ட 7 பிரிவினர்களை ஒரே பிரிவாக அதாவது தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ள இந்த பிரிவினர்களை ஒரே பெயரின்கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் ஒரே பெயரில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2015 முதல் எங்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி 7 பிரிவுகளையும் ஒரே பெயரில் அதாவது தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் கொண்டுவந்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையின்படி தேவேந்திரகுல வேளாளர் என்று சாதிச்சான்று வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை பட்டியலின சமூகத்திற்கான பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே, பட்டியலினத்திற்கான பட்டியலில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை சேர்க்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உரிய ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: