டெல்டா வைரஸ்களின் சமூக பரவலை தடுக்க முடியாது தடுப்பூசி போடாதவர்களை தாக்கியே தீரும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘டெல்டா வகை வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியவை. இந்த வகை வைரஸ்கள் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் வேகமாக பரவக்கூடியவை. முழுமையாக தடுப்பூசி போடும் வரை இதன் சமூக பரவலை தடுக்க முடியாது,’ என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம் எச்சரித்துள்ளார். இந்தியாவில் டெல்டா வகை வைரஸ் முதல் முதலாக கடந்த அக்டோபரில் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் என புதிய வகையாக மாறி இருக்கிறது. இந்த டெல்டா வகை வைரஸ்கள் தற்போது உலக நாடுகளின் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன. இது குறித்து உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானம் நேற்று தனது பேட்டியில், ‘‘டெல்டா வகை வைரஸ்கள் உலகிற்கு புதிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகை வைரஸ் மிக தீவிரமாக பரவக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, தடுப்பூசி போடாத மக்களிடையே இந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவி சமூக பரவலை ஏற்படுத்தக் கூடும். அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே டெல்டா பரவலை கட்டுப்படுத்த முடியும்,’’ என்றார். உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவே கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் டெல்டா வகை வைரஸ்கள் 85 நாடுகளில் பரவி உள்ளது. தற்போது, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், பொது நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படத் தொடங்கி உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் கூடுவதால், மீண்டும் டெல்டா வகை வைரஸ்களின் தாக்குதல் அதிகமாக வாய்ப்புள்ளன,’’ என எச்சரித்துள்ளார். எனவே, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் கூட கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

48,698 பேருக்கு பாதிப்பு

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது.

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 48,698 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக உள்ளது.

* நேற்று ஒரே நாளில் 1,183 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி 3 லட்சத்து 94 ஆயிரத்து 493 ஆக உள்ளது.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 95 ஆயிரத்து 565 ஆக சரிந்துள்ளது.

* தினசரி தொற்று பாசிடிவ் விகிதம் 2.79 சதவீதமாகவும், வார தொற்று பாசிடிவ் வகிதம் 2.97 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

 

40 கோடி பேருக்கு பரிசோதனை

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 40 கோடியை எட்டியிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 40 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரத்து 892 ஆக உள்ளது. இதுவே, கடந்த ஜூன் 1ம் தேதி 35 கோடியாக இருந்தது. தொடர்ந்து பரிசோதனை வசதியை மேம்படுத்தியதன் மூலம், கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகரிக்க முடிந்ததாக ஐசிஎம்ஆர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: