ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகள்-சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகள் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை  உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இடையப்பட்டி காந்தி ரோடு பகுதியில் பழைய நகராட்சி அலுவலகம் இருந்து வந்தது. இங்கு அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் பணி மேற்கொள்ள போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து அதிகாரிகளின் நடவடிக்கையால் மங்கம்மா குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு புதிய அலுவலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு குடிநீர் இணைப்பு, வரி செலுத்துதல், பொறியியல், கணினி உள்ளிட்ட பல்வேறு பிரிவு அடிப்படையில் பணியாளர்கள் சிரமமின்றி பணியாற்றி வருகின்றனர்.

மேலும், நகராட்சி பகுதிக்குட்பட்ட பொட்டிக்கான் பள்ளம் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் நுண் உர செயலாக்க மையம் சுமார் ₹62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதில் நகர மக்களிடமிருந்து மக்கும், மக்கா குப்பை என குப்பைகளை தரம் பிரித்து பெறப்பட்டு நுண் உர செயலாக்க மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட குப்பையிலிருந்து பத்து பிரிவுகளாக குப்பைகளை தரம் பிரிக்கின்றனர். இதனையடுத்து, மக்கக்கூடிய குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும், மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகளை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக நுண் உர செயலாக்க மையத்தில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படாமல் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க 10 சதவீதம் மட்டுமே பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மொத்தமாக பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து வருகிறது. இதனை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு அடைந்து காற்று மாசுபட்டு அதன்மூலம் பல்வேறு நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

இதுசம்பந்தமான பராமரிப்பு பணியில் ஈடுபடும் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் ஊழியர்கள் முறையாக இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் தேங்கி குவிந்து வருகிறது. எனவே துறை அதிகாரிகள் நுண் உர செயலாக்க மையத்தில் நோய் தொற்றை உருவாக்கும் வகையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்களுக்கு கழிவறை, தண்ணீர் வசதி இல்லை

இங்குள்ள மையத்தில் பெண்கள், ஆண்கள் என இரு பிரிவினரும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை வசதி, தண்ணீர் வசதி இல்லை. இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: