நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய லட்சத்தீவு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் கடிதம்

திருவனந்தபுரம்: லட்சத்தீவில் அதன் நிர்வாக அதிகாரி பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய சட்டங்களை திரும்ப பெற உத்தரவிடும்படி கோரி, ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதி உள்ளனர்.  லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக சமீபத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல், பல்வேறு கெடுபிடி சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  இதனால் வாழ்வாதாரம், அடையாளமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இவரை திரும்ப பெறக்கோரி முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளனர். கேரள சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏராளமான வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், லட்சத்தீவின் நீதிமன்ற அதிகாரத்தை கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிர்வாக அதிகாரி புதிதாக பரிந்துரை செய்துள்ளார்.

 இந்நிலையில், ‘லட்சத்தீவு அபிவிருத்தி அதிகார சபை ஒழுங்குமுறை -2021’ சட்டத்தை திரும்ப வேண்டும் என 60 இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.  அதில், ‘இந்த சட்டம் ஏற்கனவே லட்சத்தீவின் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையீட்டு சட்டத்தை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளனர்.  

Related Stories: