70% கோயில்களின் சொத்து விவரம்: இணையதளத்தில் பதிவேற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கன்னியாகுமரி மாவட்ட மரபுசார் மீட்பு குழு செயலாளர் கிருஷ்ணமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது ஆங்கிலேயர்களால் கோயில் மற்றும் அவை சார்ந்த நிலங்கள் அரசு புறம்போக்கு என வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டன. தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்தாலும், இன்னும் இவை வருவாய் ஆவணங்களில் கோயில்-அரசு புறம்போக்கு என்றே உள்ளது. இதனால் ஆக்கிரமிப்பில் இருக்கலாம்.ஜமாபந்தியின்போது சம்பந்தப்பட்ட நிலத்தின் நிலை, ஆக்கிரமிப்பு உள்ளதா, எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது குறித்து ஜமாபந்தி அலுவலர் மூலம் அறிக்கையளிக்க வேண்டும். இதன்படி, நடைபெறவுள்ள ஜமாபந்தியில் கோயில் அரசு புறம்போக்கு நிலத்தின் நிலை, ஆக்கிரமிப்பு விவரம், நிலத்தின் அளவு உள்ளிட்டவை குறித்து அறிக்கையளிக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு தரப்பில், ‘‘தமிழ்நாடு முழுவதும் 70 சதவீத கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், அவற்றின் நிலை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றின் விவரமும் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் முடிந்துவிடும். தேவையான விபரத்தை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்’’ என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ‘‘மீதமுள்ளவையும் பதிவேற்றம் செய்யும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>