காரையாறு வனப்பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் 6 கி.மீ. தூரம் நடந்து சென்று செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவி

*பழங்குடியின மாணவர்கள் தவிப்பு தீருமா?

வி.கே.புரம் : காரையாறு வனப்பகுதியில் செல்போன் டவர் கிடைக்காததால் கல்லூரி மாணவி இறுதி செமஸ்டர் தேர்வை 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சாலையோரம் அமர்ந்து தேர்வு எழுதினார். நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான காரையாறு, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியாக விளங்குகிறது. இதனால் இப்பகுதியில் செல்போன் டவர்கள் ஏதுவும் அமைக்க வனத்துறை அனுமதி அளிப்பதில்லை. காரையாறு, மயிலாறு, சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட வனப்பகுதியில் கானி இன பழங்குடியினர்கள் குடும்பமாக வசிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா பரவலால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பயிற்றுவிக்கப்படுகிறது.

இதனால் காரையாறு மற்றும் விகேபுரம் பள்ளிகளில் 10, 11  மற்றும் 12வது வகுப்பு பயிலும் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம், மயிலாறு காணி குடியிருப்பின் பின் பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 300 அடி உயரமுள்ள சொங்கமொட்டை என்ற மலையின் உச்சி பகுதியில் செல்போன் டவர் கிடைப்பதை அறிந்த அப்பகுதி மாணவர்கள் அந்த இடத்தில் வெயில், மழையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கொட்டகை அமைத்து ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்று வருகின்றனர்.

இந்நிலையில் சேர்வலாறு பகுதியிலும் டவர் கிடைக்காததால் மாணவ, மாணவிகள் சிரமமடைந்தனர். சேர்வலாறு காணி குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் மகள் ரம்யா (19),  இவர் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வருகிறார். இப்பகுதியிலிருந்து கல்லூரி சென்று வரும் ஒரே மாணவியான ரம்யாவுக்கு தற்போது செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கிறது. இவரது குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் இல்லததால் பரீட்சை எழுத வழியில்லாமல் திணறினார்.

அப்போது அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லோயர்டேம் பகுதியில் செல்போன் டவர் கிடைப்பதை அறிந்து, உறவினர்கள் உதவியுடன் அந்த இடத்திற்கு நடந்து சென்று சாலையோரம் அமர்ந்து ஆன்லைன் மூலமாக நேற்று காலை 6வது செமஸ்டர் தேர்வை எழுதினார். அரியர் போடலாம் என்று கருதாமலும், கொரோனா காலம் என்பதால் தேர்வு எழுத ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என்றோ நினைக்காமலும், வனப்பகுதியில் 6 கிலோ மீட்டர் தூரத்தை ஆர்வமாக நடந்து சென்று தேர்வு எழுதிய மாணவி ரம்யாவின் செயல் ஒரு முன்னுதாரணமானது.

காரையாறு வனப்பகுதியில் செல்போன் இணைப்புகள் ஏதும் கிடைக்காததால் கானி இன  மாணவர்கள் கல்வி கற்க பெரும் சிரமமடைகின்றனர். மாணவர்கள் மலை உச்சியையும்,  மலையை விட்டு கீழிறங்கியும் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடிச்சென்று கல்வி  பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு என்று விடிவு காலம் கிடைக்கும்  என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

Related Stories: