திருவண்ணாமலையில் அதிகாலை பரபரப்பு; எஸ்ஐ வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: கார், 2 பைக் எரிந்து சேதம்; முகமூடி பெண் வெறிச்செயல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் முகமூடி அணிந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் வீட்டில் இருந்த கார், 2 பைக்குகள் எரிந்து கருகின. திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தலாங்குளத்தெருவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றிரவு அனைவரும் வீட்டின் 3வது மாடியில் தூங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இவரது வீட்டு போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார், 2 பைக்குகள் மற்றும் வீட்டின் கதவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார், 2 பைக்குகள் முற்றிலும் எரிந்து சேதமானது. ேமலும் வீட்டின் சுவர் முழுவதும் புகை சூழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு பெட்ரோல் கேன் இருந்ததை கண்டனர்.

இதனால் யாரோ மர்ம ஆசாமிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுடிதார் அணிந்த பெண் துப்பட்டாவால் தனது முகத்தை மூடியபடி வீட்டின் கேட்டை திறந்து உள்ளே வருவதும், பின்னர் கேனில் இருந்த பெட்ரோலை கார் மற்றும் பைக்குகள் மீது ஊற்றிவிட்டு பின்னர் கேட்டை மூடிவிட்டு வெளியே செல்கிறார். பின்னர் வெளியில் நின்றபடி தீக்குச்சியை கொளுத்தி கார் மற்றும் பைக்குகள் மீது வீசிவிட்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துஎஸ்ஐ வீட்டில் பெட்ேரால் ஊற்றி தீ வைத்த பெண் யார், தீ வைப்புக்கான காரணம் என்ன என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>