21 ஆயிரம் கோடியிலான பத்ரா மேலணை திட்டத்தில் ஊழல்: எடியூரப்பா குடும்பம் மீது குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.21 ஆயிரம்  கோடி செலவில் நிறைவேற்றப்படும் பத்ரா மேலணை திட்டத்தில் முதல்வர் எடியூரப்பாவின்  குடும்பம் ஊழல் செய்துள்ளதாக பாஜ.வை சேர்ந்த மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத்  பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக விஸ்வநாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மாநில அரசின் சார்பில்  ரூ.21,470 கோடி மதிப்பில் பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டது. இதில் பெருமளவில் முதல்வர் எடியூப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்துள்ளனர். இந்த திட்டத்தில் மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன  திட்டம், கிருஷ்ணா மேலணை திட்டம் உள்பட பல நீர்ப்பாசன திட்டங்களிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். அதற்கான ஆதாரம்  என்னிடம் உள்ளது,’’ என்றார்.

இது குறித்து கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்ரா மேலணை திட்டம் ரூ.21,473.67 கோடி மதிப்பில்  செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்ததுடன் மாநில நிதியமைச்சகம் கடந்த  16.12.2020ம் தேதி ஒப்புதல் வழங்கியது. கடந்த 24.12.2020ம் தேதி மத்திய  நீர்ப்பாசன துறை அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு ரூ.16,125.48 கோடி  மதிப்பில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது. இதனிடையில், பத்ரா  மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று  மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மாநில  அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்துள்ள மத்திய அரசு, இந்த கோப்புகளை  முதலீடு அனுமதி வாரியத்தின் பரிசீலனைக்கு கடந்த 21.03.2021 அன்று  அனுப்பியுள்ளது.  இது இன்னும் நிலுவையில் உள்ளது,’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: