சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கிய கடனை அடைக்கும் கழுதைகள்

இஸ்லாமாபாத்: சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை, கழுதைகளை விற்று பாகிஸ்தான் அடைக்கிறது. உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட 3வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நாட்டில், எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக  அதிகரித்துள்ளது. ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில்  இருந்து 3.5 கோடியாக  உயர்ந்துள்ளது. செம்மறி ஆடு இனப்பெருக்க எண்ணிக்கை ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. இப்போதைய நிலையில், பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு பெரிய காரணம் உள்ளது.

சீனாவில் கழுதைகளுக்கு அதிகளவில் கிராக்கி உள்ளது. இதில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. மேலும், சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே  இந்நாட்டில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

*  ‘கழுதை அரசன் இம்ரான்’

கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமராக இம்ரான் பொறுப்பேற்றதில் இருந்து கழுதைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. இதனால்,  எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான்கானை ‘கழுதைகளின் அரசன்’ என பட்டப்பெயர் சூட்டி கிண்டல் செய்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக அவர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியிலும் ஈடுபட்டனர்.

Related Stories: