மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து அமைச்சர்களுடன் மோடி நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்தது. மோடியும் 2வது முறையாக பிரதமரானார். 2 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யாத நிலையில், தற்போது மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜ.வில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாமில் முதல்வர் பதவியை விட்டுத் தந்த சர்பானந்த சோனாவால், பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, ஜே பாண்டயா உட்பட 10 புதிய முகங்களுக்கு இந்த மாற்றத்தில் இடம் கிடைக்கலாம் என்றும், அடுத்த மாதத்தில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த ஒரு வாரமாக மத்திய அமைச்சர்கள், பாஜ தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், ஜித்தேந்தர் சிங் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று மீண்டும் நட்டா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சதானந்தா கவுடா உட்பட அமைச்சர்களுடன் மோடி அவருடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதுவரை நடந்த கூட்டங்கள் சுமார் 5 மணி நேரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்துதான் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: