ஓட்டுப்போட வழங்கிய டோக்கனுக்கு பணம் எங்கே? சேலம் பாமக எம்எல்ஏவை கண்டித்து போராட்டம்

சேலம்:  சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ஓட்டுப்போட வழங்கிய டோக்கனை காட்டி பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சட்டமன்ற தேர்தலில், சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அருள் வெற்றி பெற்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் அருள் எம்எல்ஏவுக்கு ஓட்டு போட டோக்கன் பெற்றவர்கள் பணம் வாங்க அவரது வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் மாம்பழம் பொறித்த ₹2ஆயிரம் ரூபாய்க்கான டோக்கனில் ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும், இன்னொரு பக்கத்தில் ராமதாஸ், ஜிகே.மணி படமும் அச்சிடப்பட்டிருந்தது. கீழ் பகுதியில் அருள் எம்எல்ஏ படமும், அவரது தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்ததும் டோக்கன் வைத்திருப்போர் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருள் எம்எல்ஏ, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுபற்றி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த தொகுதிகுட்பட்ட கருக்கல்வாடி ஊராட்சி, கோட்டமேடு பச்சைக்காடு ஊராட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், நேற்று டோக்கனுடன் போராட்டம் நடத்தினர்.  அவர்கள் கூறுகையில், ‘‘தேர்தல் நேரத்தில் வீடு வீடாக வந்து, மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனை கொடுத்து, தேர்தல் முடிந்தும் ₹2ஆயிரம் அல்லது அதற்கான மளிகை பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றனர். இப்போது பணம் கொடுக்க மறுக்கிறார்கள்’’ என்றனர்.

Related Stories: