அமைச்சரவையே இன்னும் பதவியேற்கவில்லை வாரியத் தலைவர் பதவிகளையும் கேட்டு ரங்கசாமியை வறுத்தெடுக்கும் பாஜக: புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் இடம்பெற்ற என்ஆர் காங்கிரஸ் (10), பாஜக (6) தொகுதிகளில் வென்ற நிலையில் கூட்டணி ஆட்சியை அமைத்தன. முதல்வராக ரங்கசாமி மே 7ம்தேதி பதவியேற்றார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. இந்த 2 கட்சிகளுக்கு இடையே சபாநாயகர், அமைச்சர்கள் இடங்களை பங்கீடு செய்வதில் முதலில் பிரச்னை ஏற்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இப்பதவிகளுக்கு யாரை தேர்வு செய்வதில் என்பதில் உட்கட்சிக்குள்ளேயே புகைச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு பாஜக மேலிட பார்வையாளரான ராஜீவ் சந்திரசேகர் எம்பி, 3 முறை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசி அமைச்சர் பட்டியலை அவரிடம் வழங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் இதுவரை பதவியேற்புக்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. சபாநாயகர் பதவியேற்க சட்டசபையை கூட்டுவதற்கான அறிவிப்பினை சட்டசபை செயலகமும், அமைச்சரவை பதவியேற்புக்கான ஒப்புதலை கவர்னர் மாளிகையும் இதுவரை வெளியிடவில்லை. இது இந்த 2 கட்சிகள் இடையே இலாகாக்கள் பங்கீடு விவகாரம் இன்னமும் முற்றுபெறவில்லை என்பதையே காட்டுகிறது. முதல்வர் ரங்கசாமியோ இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக மேலிடத்திடம் பேசிக் கொள்வதாக மேலிட பார்வையாளிடம் கூறி அனுப்பி விட்டார். ஆனால் இதுவரை அவர் பாஜக தேசிய தலைமையை தொடர்பு கொண்டு பேசவில்லை. அக்கட்சியும் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

இதனால் அமைச்சரவை பதவியேற்பு என்பது மேலும் தாமதமாவது உறுதியாகி விட்டது. இதுஒருபுறமிருக்க தற்போது தேஜ கூட்டணியில் வாரியத் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு விவகாரம் தலைதூக்கி அடுத்தகட்ட பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் கிளப்பி வருகின்றன. பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்களை அக்கட்சி ரங்கசாமியிடம் கேட்டுள்ள நிலையில் தனது கட்சியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஏதாவது ஒரு பதவியை ஆட்சி அதிகாரத்தில் வழங்க வேண்டுமென்பதிலும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக தற்போது அரசில் முக்கிய பதவிகள், வாரியத் தலைவர் பதவிகளில் முக்கியமானவற்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென புது நெருக்கடியை பாஜக, ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருகிறது. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருமானமிக்க, மக்கள் நலன் தொடர்புடைய வாரியங்களை அக்கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேஜ கூட்டணிக்குள் அடுத்தடுத்து விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

முக்கிய பதவிகள் வாரியங்கள் என்னென்ன?

அரசு கொறடா, டெல்லி பிரதிநிதி, முதல்வரின் பாராளுமன்ற செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தவிர நகரமைப்பு திட்ட குழுமம், வடிசாராய ஆலை, மகளிர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம், குடிசை மாற்று வாரியம், பிப்டிக், பாப்ஸ்கோ, மின் திறன் குழுமம், பாசிக், பஞ்சாலை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாரியங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை தவிர்த்து பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்கின. இதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி தேஜ அணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமகவும் சில வாரியங்களை கேட்டு வருகின்றன. இதனால் யார், யாருக்கு எந்தெந்த வாரியங்களை ஒதுக்குவது? என்ற பிரச்னை பூதாகரமாகி உள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் அமைதி காப்பதால் இப்பிரச்னையும் முடிவுக்கு வர தாமதமாகும் என்றே தெரிகிறது.

Related Stories: