காவல்துறையின் ‘‘கானா தண்டனை’’ ஊரடங்கை மீறியா சுத்துறீங்க...? ஒழுங்கா வந்து பாடிட்டு போங்க...! இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம்

கம்பம்: கம்பத்தில் வெளியில் சுற்றுபவர்களை பூங்காவில் பாட்டு பாட வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். கொரோனா ஊரடங்கை மீறி பலர் வீதியில் அவசியமின்றி திரிகின்றனர். தேனி மாவட்டம், கம்பம், சர்ச் தெருவில் 10க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடி அரட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு தகவல் போனது. அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து, காவல் நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவில் சமூக இடைவெளியுடன் அமர வைத்தனர். பின் இசைக்கலைஞர்கள் வாசிப்பிற்கேற்ப ‘‘அரட்டைக்கச்சேரி’’ நடத்தியவர்களை கானா பாடல் பாட வைத்தனர். ஒரு சிலர் அவர்கள் ரேஞ்சுக்கு பாடினாலும், பலர் நெளிந்து, வளைந்தனர். இதையடுத்து அவர்களிடம், ‘‘தேவையின்றி தெருவில் கூட்டம் கூட மாட்டோம்’’ என போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்பம் மக்கள் கூறுகையில், ‘‘போலீசாரின் இந்த நூதன தண்டனையால், இனிமேல் பொதுவெளியில் யாரும் கூட்டம் கூட மாட்டார்கள். போலீசாரை கண்டதும் பாட விட்டுருவார்களோ, என பயந்து ‘‘ஆளை விடுங்கப்பா சாமி’’ என ஓட ஆரம்பித்து விடுவார்கள்’’ என்றனர்.

Related Stories: