பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது: 5 நாள் காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து, மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியர் ஆனந்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஆசிரியர் மீது தொடர் புகார்கள் வருவதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை கே.ேக.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பான விசாரணையும் தற்போது நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமான சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் தொந்தரவு கொடுப்பதாக டிவிட்டரில் பதிவு செய்தனர். அதேநேரம், பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளின் புகாரின் மீது குழு அமைத்து விசாரணை நடத்தினர்.

அதில், வணிகவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆனந்த் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அதிரடியாக ஆசிரியர் ஆனந்தை சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டது. மாணவிகளின் பதிவை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் தானாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அதைதொடர்ந்து பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியர் ஆனந்த் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் ஆனந்த் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போன்று சிறப்பு வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்த் மீது மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் காவல் துறை அறிவித்துள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர் புகார் அளித்து வருவதால், ஆசிரியர் ஆனந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: