ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் சுமித் மாலிக் இடைநீக்கம்

புது டெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23ல் தொடங்குகிறது. இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு 90க்கும் அதிகமான இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர்  மல்யுத்த வீரர், வீராங்கனைகள். ஆண்கள்  125 கிலோ எடை பிரிவில் சுமித் மாலிக் பங்கேற்க இருக்கிறார். அதற்கான தகுதிச்சுற்றில் கடந்த மாதம்  பங்கேற்றபோது அவரின் சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றில் ‘ஏ’ மாதிரியின் முடிவு வெளியாகி உள்ளது. அதில் சுமித் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அதனையடுத்து  உலக மல்யுத்த கூட்டமைப்பு சுமித் மாலிக்கை  இடைநீக்கம் செய்துள்ளது. ‘பி’ மாதிரியின் சோதனை முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும். அதிலும் போதை மருந்து பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: