பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 3 நாட்கள் போலீஸ் விசாரணை முடிந்து ராஜகோபாலன் சிறையில் அடைப்பு: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் அரை நிர்வாணமாக அவர் பாடம் எடுத்த புகைப்படங்களும் வெளியானது. இதனைதொடர்ந்து முன்னாள் மாணவிகள், தற்போது பயின்று வரும் மாணவிகள் என அனைவரும் ரகசியமாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 24ம் தேதி போலீசார் ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜகோபாலனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக், ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இந்த 3 நாள் விசாரணையில் ராஜகோபாலன் பல்வேறு உண்மைகளை கூறியதாகவும், அவரிடம் இருந்த வீடியோக்களை வைத்து விசாரணை நடத்தியதாகவும், அவருக்கு பள்ளி நிர்வாகம் அளித்த ஒத்துழைப்பு குறித்த உண்மைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று 3 நாள் காவல் முடிந்த நிலையில் போலீசார் மீண்டும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி  ராஜகோபாலனை வரும் 8ம் தேதி வரை மீண்டும்  சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் நேற்று ராஜகோபாலனின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி இன்றைக்கு தள்ளிவைத்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறும்.

Related Stories: