அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் நிவாரண தொகை: தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது

சென்னை: அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் நிவாரண தொகை 2ம் தவணையாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு துறை செயலாளர் முகமது நசிமுத்தீன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் தற்போது 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இந்த மாதம் (ஜூன்), அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் நிவாரண தொகை இரண்டாம் தவணையாக வழங்க அரசுக்கு 4,196.38 கோடி செலவு ஏற்படும். பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, முதல் தவணையாக 2,098 கோடியும், இரண்டாம் தவணையாக 2,098 கோடி என இரு தவணைகளாக விடுவிக்கப்படும். நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு ஏற்றவாறு, சமூக இடைவெளியை பின்பற்றி தினசரி 200 முதல் 300 எண்ணிக்கையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: