வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவில் குழப்பம் விளைவிக்க ஆடியோ வெளியிடுகிறார் சசிகலா: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குழப்பத்தை விளைவிப்பதற்காக ஆடியோ வெளியிட்டு வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வந்தார். சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கோதாவரி-காவிரி திட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் என்று தெலங்கானா முதல்வரிடம் ஆதரவு கேட்டோம். ஆதரவு தருவதாக சொன்னார்கள். பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன். தமிழ்நாடு நீர்பற்றாக்குறை உள்ள மாநிலம். மத்திய அரசு தேசிய நீர்வளமை முகமை விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியின்போது பரிசோதனை மையங்கள் அதிகமாக வைத்திருந்தோம். அதேபோன்று பரிசோதனைகளையும், மையங்களையும் அதிகரிக்க வேண்டும். 4 மடங்கு கொரோனா பாதிப்பு உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசியை அதிகளவு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது அந்த அம்மையார் தான் அரசியலில் இருந்து ஒதுக்கி விட்டேன் என்று அறிக்கை விட்டார். எனவே அவரை பற்றி பேச வேண்டியதில்லை. அமமுக தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதில் வேற ஒன்றும் இல்லை.  அதிமுக தொண்டர்களிடம் அவர் பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குழப்பத்தை விளைவிப்பதற்காக ஆடியோ வெளியிடுகிறார். அதிமுகவை பொறுத்தவரை பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதிலே சில பேர் ஒரு குழப்பத்தை விளைவிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதிமுகவில் சட்டமன்ற கட்சியின் துணைத்தலைவர், கொறடா பெயர் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காததற்கு காரணம், அவரது வீட்டில் இன்றைக்கு கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுகிறார். அதனால்தான் அவர் வரவில்லை. இன்றைக்கு நல்ல நாள், அது தான் கட்சி அலுவலகத்திற்கு வந்தேன். கூட்டமோ, ஆலோசனையோ எதையும் நடத்தவில்லை. அருகில் இருக்கும் தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்திருக்கிறார்கள். வேற ஒன்றும் இல்லை.

அதிமுக தலைவர்கள் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடுகிறீர்களே, உங்களுக்குள் பனிபோர் நடக்கிறதா? என்று கேட்கிறீர்கள். இந்த கேள்வியே எனக்கு புரியல. அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர். சில சமயங்களிலேயே அரசு தவறுகளை சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிடுகிறேன். பொதுவாக வரும் செய்திகளை அவர் தெரிவிக்கிறார்.  வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி பரப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. புதிய அரசு பதவியேற்று 20 நாட்கள் தான் ஆகிறது, இதற்குள் என்ன குறை கூற முடியும். குறை கூறினால், இதற்குள்ளே கூறுகிறார்கள் என்று சொல்வீர்கள். கொரோனா தொற்று அதிகமாக இருக்கிற நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.  ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். மக்கள் வேதனையில் இருக்கும்போது அரசியல் பேசுவது நாகரீகம் அல்ல. எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் கஷ்டப்படும்போது குரல் கொடுப்பது தான் எங்கள் கடமை. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: