தோகாவில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவது போல் 70 கோடி போதைப்பொருள் கடத்தல்: 2 வெளிநாட்டு பெண்கள் சிக்கினர்

சென்னை: தோகாவில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதுபோல் நடித்து 70 கோடி போதைப் பொருட்கள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் விமான நிலையத்தில் பிடிபட்டனர். வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னை சர்வதேச  விமான நிலையத்தில் திவீர கண்காணிப்பில் இருந்தனர்.இந்நிலையில் நேற்று  கத்தார்  நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர்  தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு வெளிநாட்டு பெண் தள்ளிக்கொண்டு வந்தார். ஆனால், அந்த சக்கர நாற்காலியில் இருந்த சுமார் 45 வயது பெண் உடல்நலம் பாதித்தவர்போல் தெரியவில்லை.

இதனால், சந்தேகமடைந்த சுங்கத்துறையினர், அப்பெண்களை நிறுத்தி விசாரித்தனர்.  அதில், சக்கர நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாவே நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்ததும் தெரிந்தது. சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமார் 30 வயது பெண் தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்பதும், ஜிம்பாவே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளராக அவரும் மருத்துவ விசாவில் வந்ததும் தெரிந்தது.ஆனால், அவர்கள் சென்னையில் எந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர், எத்தனை நாட்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர், எந்த மருத்துவரிடம் முன் அனுமதி பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை.  அதோடு சென்னைக்கு வந்து டெல்லி மருத்துவமனைக்கு செல்வதாக மாற்றி மாற்றி பேசினர். இதையடுத்து சுங்கத்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த டிராலி சூட்கேஸ், பைகளில் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 70 கோடி. இதையடுத்து சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் சென்னையில் யாரிடம் கொடுக்க இந்த போதைப் பொருட்களை கொண்டு வந்தனர். இவர்கள் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்து கின்றனர்.

Related Stories: