அடுத்தாண்டு பேரவை தேர்தல் சுறுசுறுப்பு; 3 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் காங். கட்சிக்கு தாவல்: பஞ்சாப்பில் திடீர் திருப்பம்

சண்டிகர்: அடுத்தாண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 3 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்துவுக்கும் அமரீந்தர் சிங்குக்கும் மோதல் இருந்து வரும்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமை நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தியது. அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 பஞ்சாப் எம்எல்ஏக்கள் நேற்று காங்கிரசில் இணைந்தனர். அவர்களில், எம்எல்ஏக்கள் சுக்பால் சிங் கைரா, ஜக்தவ் சிங் கம்லு, பிர்மல் சிங் தவுலா ஆகிய மூவரும், முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுதொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முன்னிலையில், ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் சுக்பால் கைரா, ஜக்தேவ் சிங் கம்லு, பிர்மல் சிங் தவுலா ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். கட்சி தலைமையின் மூன்று பேர் குழு டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக, 3 எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, ​​முதல்வரின் மனைவியான எம்பி பிரீனீத் கவுரும் உடனிருந்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த சுக்பால் கைரா, அக்கட்சியில் இருந்து விலகி  2015 டிசம்பரில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர் 2017ம் ஆண்டில் போலாத் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2019 ஜனவரியில் ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘பஞ்சாப் ஏக்தா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: