பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததாக மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கு ரத்து!: உச்சநீதிமன்றம் அதிரடி..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக பத்திரிகையாளர் வினோத் துவா மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை உச்சநீதிமன்றம் அடியாக ரத்து செய்திருக்கிறது. 2020ம் ஆண்டு சமூக ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மூத்த  பத்திரிகையாளர் வினோத் துவா, பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியின் மீது அவதூறு பரப்பியதால்  வினோத் துவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிமாசலப்பிரதேச காவல்துறையில் பாஜக பிரமுகர் அஜய் ஷியா புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து பத்திரிகையாளர் துவா மீது தேசத்துரோகம், அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரை கைது செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்தனர். வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், வினோத் துவா மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோகம் மற்றும் பிற குற்றசாட்டுகளை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 ஏ-யின் படி, ஒருவரது பேச்சு வன்முறையை தூண்டுமாறும், பொது அமைதிக்கு கேடு விளைவிக்குமாறும் இருந்தால் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் 1962ம் ஆண்டு கேதார்நாத் சிங் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பாதுகாப்பு பெற உரிமை உண்டு என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் மீதான குற்றசாட்டுகளை சரிபார்க்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற வினோத் துவாவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Related Stories: