மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை தடுக்க டொமினிகா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு லஞ்சம்: சகோதரர் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி:  மெகுல் சோக்சியை நாடு கடத்தக் கூடாது என்பதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டொமினிகோ நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோக்சியின் சகோதரர் சேத்தன் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில்  இந்தியாவில் இருந்து தப்பி சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா பர்புடாவில் தங்கி இருந்தார். சில நாட்களுக்கு முன் டொமினிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்குள்ள கடற்கரையில் டொமினிகா போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், மெகுல் சோக்சியை நாடு கடத்தக் கூடாது என்பதற்காக டொமினிகா நாட்டு எதிர்கட்சி தலைவர்களுக்கு சோக்சியின் சகோதரர் சேத்தன் லஞ்சம் கொடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.

மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டதாக  தகவல் அறிந்தவுடன் ஹாங்காங்கில் தங்கியிருந்த சேத்தன்,  டொமினிகா விரைந்தார். அவர் ஏராளமான பணத்துடன் வந்துள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், மெகுல் சோக்சி நாடு கடத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக எதிர்க்கட்சி தலைவருக்கு 2 லட்சம்  டாலர் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆன்டிகுவா, டொமினிகா ஆகிய 2 நாடுகளிலும் உள்ள எதிர்க்கட்சிகள், மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்பதையே வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை ரத்து பற்றி சோக்சிக்கு நோட்டீஸ்

ஆன்டிகுவா பர்புடா நாட்டு குடியுரிமையை மெகுல் சோக்சி பெற்றுள்ளார். இதை ரத்து செய்வது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு அந்நாட்டு அரசு அவருக்கு விளக்க நோட்டீசை அனுப்பியது. அதன் பிறகு, அதை கிடப்பில் போட்டு இருந்தது. தற்போது, இந்த நோட்டீசை மீண்டும் அவருக்கு அனுப்பியுள்ளது. இதற்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கும்படி சோக்சிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: