பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு அதிரடி மே.வங்க மாஜி தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்: 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம் மோடி-மம்தா மோதல் விஸ்வரூபம் எடுக்கிறது

கொல்கத்தா: மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டும் பணியில் சேராதது குறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சட்டத்தின் படி அவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற பிரதமர் மோடியுடனான ஆய்வு கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் புறக்கணித்ததை தொடர்ந்து, மத்திய அரசுக்கும் மம்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆய்வு கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் மேற்கு வங்க தலைமை செயலாளராக இருந்த அலிபான் பந்தோபாத்யாய் மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை 10 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், மம்தா அவரை விடுவிக்கவில்லை. மேலும்,  பணிமூப்பு அடிப்படையில் அலிபான் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தனக்கு அளிக்கப்பட்ட 3 மாத பணி நீட்டிப்பை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக அவரை மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக மம்தா நியமித்தார். இதன் மூலம் மம்தா-பிரதமர் மோடியுடனான நேரடி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. மம்தாவின் இந்த நடவடிக்கையால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.  இந்நிலையில், மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளர் அலிபான் பந்தோபாத்யாய்க்கு 51 (பி) பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நோட்டீசுக்கு 3 நாட்களுக்கு விளக்க கடிதம் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீசின்படி மத்திய அரசு, மாநில அரசு, தேசிய நிர்வாக குழு, மாநில நிர்வாக குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் சார்பில் வழங்கப்படும் எந்தவொரு உத்தரவை பின்பற்ற மறுக்கும் எவரும் தண்டனைக்கு  உட்படுத்தப்படுவார்கள். அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதனால், மத்திய அரசின் இந்த நோட்டீஸ் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தாவுக்கு ‘ஈகோ’ கவர்னர் விமர்சனம்

மேற்கு வங்க கவர்னர்  ஜெகதீப் தன்கார் வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில், ‘மக்கள் பணியில் மம்தாவுக்கு நிலவிய ஈகோதான், பிரதமர் மோடி உடனான ஆய்வு கூட்டத்தை புறக்கணிக்க காரணம். மே 27ம் தேதி இரவு 11.16க்கு மம்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த எனக்கு, ‘அவசரம். உங்களிடம் பேசலாமா’ என்று ஒரு மெசேஜ் வந்தது. போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு, ‘யாஸ்’ புயல் பாதிப்பு குறித்து பிரதமர் ஆய்வு கூட்டத்தில் சுவேந்து அதிகாரி கலந்து கொண்டதால், கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்’ என மம்தா தெரிவித்தார். இது, மக்கள் பணியில் அவருக்கு உள்ள ஈகோவை வெளிப்படுத்துகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: