கொரோனா ஊரடங்கை மீறி கொடைக்கானல் வனப்பகுதியில் டிரெக்கிங் சென்ற 10 பேர் கைது: சமூக வலைதளங்களில் பரவியதால் நடவடிக்கை

கொடைக்கானல்: கொரோனா ஊரடங்கை மீறி, கொடைக்கானல் வனப்பகுதியில் ‘டிரெக்கிங்’ சென்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் கீழ்மலை பகுதியான வடகவுஞ்சியில் இருந்து செம்பரான்குளம் வனப்பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இதை அவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றமும்

செய்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் ரோந்து போலீசார், ‘டிரெக்கிங்’ சென்ற 10 பேரை பிடித்தனர். தடையை மீறி ‘டிரெக்கிங்’ சென்றதாக வழக்குப்பதிந்து அவர்கள் 10 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி சிவா கூறுகையில், ‘‘மருத்துவ சிகிச்சை, விவசாயப் பணிகளுக்கு செல்வதாக கூறி சிலர் மலையேற்றம் செல்கின்றனர்.

பழநி-கொடைக்கானல் சாலையில் டிரெக்கிங் செல்வதைத் தடுக்கும் வகையில் அய்யம்புள்ளி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலுக்கு அரசு அனுமதியின்றி பழநி வழித்தடத்தில் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: