புயல், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடல் நடுவில் சண்டையிட்டு கொண்டால் மூழ்கிவிடுவோம்: ஜார்க்கண்ட் முதல்வர் ஆவேசம்

ராஞ்சி: நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடல் நடுவில் சண்டையிட்டுக் கொண்டால் மூழ்கிவிடுவோம் என்று, ஜார்க்கண்ட் முதல்வர் ஆவேசமாக கூறினார். மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி சென்றுவந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் நிர்வாக ரீதியிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா பிரச்னைகளை கையாள்வதில் அரசியல் செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல.

தொற்றுநோயின் சவால்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும். இப்போது ஒருவருக்கு ஒருவர் கால்களை இழுக்க வேண்டிய நேரம் அல்ல; புயலை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். கடலின் நடுவில் சண்டையிட்டுக் கொண்டால், நாம் மூழ்கிவிடுவோம். மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு அவசியம். பிரதமர் மோடி மாவட்ட கலெக்டர்களிடம் காணொலியில் பேசுகிறார். ஆனால் அவர் முதல்வர்களிடம் பேசுவதில்லை. கூட்டாட்சி அமைப்பில், நீங்கள் (மத்திய அரசு) மாநில முதல்வர்களை ஏற்கவில்லை.

கடந்த 70 ஆண்டுகளாக அப்படித்தான் நடக்கிறது. கொரோனா காலத்தில், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கும், உதவியற்ற மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உரிய ஏற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதன் காரணமாக பலர் உயிர்களை இழந்தனர். இப்போது நீங்கள் (பிரதமர் மோடி) முழு ஊரடங்கு வேண்டாம் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் கூறுகின்றீர்கள். மத்திய அரசானது எங்களது பாதுகாவலராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தடுப்பூசி விவகாரத்தில், ஜார்க்கண்ட் மாநிலம் அதிகளவு தடுப்பூசி மருந்துகளை வீணடித்ததாக கூறியுள்ளீர்கள்.

புள்ளிவிவரங்கள் சரியாக கணக்கிடப்படவில்லை. கோவின் போர்ட்டலில் பதிவுசெய்தலில் நிறைய குறைபாடுகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநில மக்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு இல்லாததால், இந்த விசயத்தில் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். பாஜக தலைவர்கள், உண்மையான புள்ளிவிபரங்களை மோசடியாக மாற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

Related Stories: