அமீரகத்தில் ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளால் அணி உரிமையாளர்களுக்கு இரட்டிப்பாகும் செலவு

மும்பை: 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம தேதி தொடங்கி இந்தியாவில் நடந்து வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்றால் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர்-அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அணிகளின் உரிமையாளர்களுக்கு செலவுகள் இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, பயணச் செலவுகள் இரட்டிப்பாகும். வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே ஒரு முறை வந்து வெளியேறி விட்டனர். விமானத்தில், வணிக வகுப்பில் 2வது முறையாக அவர்களை துபாய் அழைத்து வருவது, மீண்டும் திருப்பி அனுப்புவது என இருமடங்கு செலவாகும். பல வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு தொடர்களில் ஆடுவதால் அவர்களை தனி விமானத்தில் தான் அழைத்து வரவேண்டி இருக்கும்.

கடந்த ஆண்டில், துபாய், அபுதாபியில் ஓட்டலில், ஒரு அறைக்கு சராசரியாக ஒருநாள் வாடகை ரூ.12,000 செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஒரு அறைக்கு ரூ.3,500 மட்டுமே வசூலித்தன. பி.சி.சி.ஐ இந்தியாவில் உள்ள ஹோட்டல்களில் இருந்து சலுகைகளை ஏற்பாடு செய்தது. அவர்கள் இதை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செய்ய முடியுமா?, இது ஒரு பெரிய கவலை. தங்குமிட செலவு மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது என அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: